பிற நம்பிக்கைகளை பற்றி திரு அவை கூறுவது என்ன?

what does catholic church teaches about other faiths

இன்று பல போதகர்கள்  தங்களின் பிரசங்கங்களில் பிற மதங்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுவதை காணமுடிகிறது. இப்படி வெளிப்படையாக பிற மதங்களை பற்றி அவதூறு பரப்புவதால் சமுதாய சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. கத்தோலிக்க திரு அவை பிற மதங்களை பற்றி படித்து ஆராய்ந்து அவற்றை பற்றி நமக்கு விளக்கி கூறுகிறது. அவற்றை கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி மற்றும் அதன்  சுருக்கத்திலிருந்து காண்போம்.

யூத மக்களோடு கத்தோலிக்கத் திரு அவை கொண்டுள்ள உறவு என்ன? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 169)

இறைவெளிப்பாட்டை பெற்றுக்கொள்ள எல்லாருக்கும் முன்னதாக யூத மக்களைக் கடவுள் தெரிந்துகொண்டார். இதனால் கத்தோலிக்கத்  திரு அவை அவர்களோடு தனிப்பட்டதோர் உறவைக் கொண்டுள்ளது. “அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார்; அவர்கள் நடுவில் தம் மாட்சியை விளங்க செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன; குலமுதுவர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களிடம் இருந்தே தோன்றினார்” (உரோ 9:4,5). யூத சமய நம்பிக்கை, கிறிஸ்தவம் அல்லாத மற்ற சமயங்களைப் போலன்றி பழைய உடன்படிக்கையில் இறைவனின் வெளிப்பாட்டுக்கு ஏற்கனவே மறுமொழி அளித்துள்ளது.

இஸ்லாம் மக்களுக்கும் கத்தோலிக்கத் திரு அவைக்கும் உள்ள உறவானது என்ன? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி  841)

இரட்சிப்பின் திட்டம் படைப்பாளரை ஏற்றுக்கொள்பவர்களையும் உள்ளடக்கியது. ஆபிரகாமின் விசுவாசத்தைக் நிலைநாட்ட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் முனைகிறார்கள். மேலும் அவர்கள் நம்முடன் சேர்ந்து, கடைசி நாளில் மனிதனுடைய நீதிபதியான , இரக்கமுள்ள ஒரே  கடவுளை வணங்குகிறார்கள்.

கத்தோலிக்கத்க்  திருஅவைக்கும் கிறிஸ்தவம் அல்லாத சமயங்களுக்கும் இடையே உள்ள உறவு என்ன? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 170)

எல்லா மக்களுக்கும் இடையே  உறவு உள்ளது. இவ்வுறவு சிறப்பாக மானிடர் அனைவரின் பொதுவான தொடக்கத்திலிருந்தும் இலக்கிலிருந்தும் எழுகிறது. பிற சமயங்களில் உள்ள நன்மையானதையும் உண்மையானதையும் அவை கடவுளிடமிருந்தே வருகின்றன எனவும், இறைவெளிப்பாட்டின் பிரதிபலிப்பு எனவும் கத்தோலிக்கத் திரு அவை ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு நற்செய்தி ஏற்புக்குத் தயாரிப்பாக இவை அமைகின்றன. கிறிஸ்துவின் திரு அவையில் மானிடரின் ஒன்றிப்புக்குத் தூண்டுதலாக செயல்படுகின்றன.

“திரு அவைக்கு வெளியில் மீட்பு இல்லை” என்னும் கூற்றின் பொருள் என்ன? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 171)

மீட்பு முழுவதும் தலையாகிய கிறிஸ்துவிடமிருந்து அவரின் உடலாகிய திரு அவை வழியாக வருகிறது என்பதே இதன் பொருள். திரு அவை கிறிஸ்துவால் நிறுவப்பட்டது; அது மீட்புக்கு இன்றியமையாதது என் அறிந்திருந்தும், திரு அவையிலே இணையவும் அதில் நிலைத்திருக்கவும் மறுப்பவர்கள் மீட்படைய முடியாது. அதே வேளையில் தங்களது குற்றத்தாலன்றி கிறிஸ்துவின் நற்செய்தியையும் அவரது திரு அவையையும் அறியாதவர்களும், கடவுளை நேரிய வழியில் தேடி, அருள் துணையோடு மனசாட்சி அறிவுறுத்தும் இறை விருப்பத்தை நிறைவேற்ற முயலும்போது, நிலையான மீட்பை அடைய முடியும்.

திரு அவை ஏன் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க வேண்டும்? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 172)

“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்” (மத் 28:19) என்று கிறிஸ்து கட்டளை இட்டிருப்பதால் திரு அவை அதை செயல்படுத்த வேண்டும். தன் மகனை அனுப்பிய கடவுளின் நிலையான அன்பிலிருந்தும், தூய ஆவியாலிருந்தும் ஆண்டவரின் இந்த மறைத்தூதுப் பணிக்கான  கட்டளை உருவாகிறது. ஏனெனில் “எல்லா மனிதரும் மீட்பு பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்” (1 திமொ 2;4)

கத்தோலிக்கரல்லாத கிறிஸ்த்தவர்கள் மட்டில் நமது அணுகுமுறை யாது? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 163)

கத்தோலிக்க திரு அவையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிரிந்தித்திருக்கின்ற பிற திருச்சபைகளிலும் திருச்சபை சமூகங்களிலும் புனிதமாக்குதல், மறை உண்மை ஆகியவற்றின் பல கூறுகளை காணலாம். இவ் ஆசிகள் அனைத்தும் கிறிஸ்துவிடமிருந்தே வருகின்றன; இத்திருச்சபைகளின் உறுப்பினர் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவில் ஓருடல் ஆகின்றனர். எனவே நாம் அவர்களைச் சகோதரர் சகோதிரிகளாக ஏற்றுக்கொள்கிறோம்.

கிறிஸ்துவர்களின் ஒன்றிப்புக்காக உழைக்க எவ்வாறு தம்மையே அர்பணிக்கலாம்? (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி சுருக்கம் 164)

அணைத்து கிறிஸ்த்துவர்களின் ஒன்றிப்பை மீண்டும் உருவாக்கும் ஆவல் இயேசுவின் கொடையாகவும், தூய ஆவியாரின் அழைப்பாகவும் இருக்கிறது. இந்த ஆவல் முழு திரு அவையையும் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது. மனமாற்றம், இறைவேண்டல், ஒருவர் ஒருவரைப் பற்றிய புரிதல், இறையியல் கலந்துரையாடல் ஆகியவற்றால் இது நிறைவடைகிறது.

Related posts

Leave a Comment