திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் உடைகளின் முக்கியத்துவம்

vestments of catholic priests
1. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் திருப்பலி உடையின் நிறங்கள் என்ன?*

திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் ஒவ்வொரு நிற திருப்பலி உடையின் பின் ஆழ்ந்த  ஆன்மீக சிந்தனைக் உள்ளது. 
உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (345 – 346) படி பல்வேறு விசுவாச மறை உண்மைகளை கொண்டாடவும், ஒரு வழிபாடு  ஆண்டின் பல்வேறு காலங்களை குறிக்கவும் பல்வேறு நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.  கீழ்கண்ட நிறங்களில் திருப்பலி உடை இருக்கும்.

  1. வெள்ளை (White)
  2. சிவப்பு (Red)
  3. பச்சை (green)
  4. ஊதா (Violet or Purple)
  5. கருப்பு (Black) (சில மறைமாவட்டங்களில்)
  6. ரோஜா நிறம் (Rose) 
  7. தங்க அல்லது  வெள்ளி  நிறம் (Gold or Silver) (சில மறைமாவட்டங்களில் சில பெருவிழாக்களில்)
2. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் வெள்ளை நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

ஒளி, மாசற்றத்தனம், தூய்மை, மகிழ்ச்சி, வெற்றி, மாட்சி போன்றவற்றை வெள்ளை நிறம் குறிப்பிடுகிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346a) படி கீழ்கண்ட தருணங்களில் வெள்ளை நிற திருப்பலி உடை  அணியப்படுகிறது. 

உயிர்ப்பு பெருவிழா, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாட்களிலும்,  மற்றும் பாடுகளைக் குறிக்கும் விழாக்களைத் தவிர்த்து நமது ஆண்டவரின் மற்ற  கொண்டாட்டங்களிலும், தூய கன்னி மரியாள் தொடர்பான கொண்டாட்டங்களிலும், தூய வானதூதர்கள் தொடர்பான கொண்டாட்டங்களிலும் வேத சாட்சி இல்லாத புனிதர்கள் தொடர்பான கொண்டாட்டங்களிலும் வெள்ளை நிற ஆடை அணியப்படுகிறது. மேலும் அனைத்து புனிதர்களின் பெருவிழா (நவம்பர்1), புனித திருமுழுக்கு   யோவானின் பிறப்பு பெருவிழா (ஜூன்24), நற்செய்தியாளர் புனித யோவானின் பெருவிழா (டிசம்பர் 27), புனித பேதுருவின் தலைமை பீட பெருவிழா (பிப்ரவரி 22), புனித பவுலின் மனமாற்ற பெருவிழா (ஜனவரி25) ஆகிய விழா நாட்களிலும் வெள்ளை நிறத் திருப்பலி உடை  அணியப்படுகிறது.

3. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் சிவப்பு நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

சிவப்பு நிறம் பாடுகள், இரத்தம், நெருப்பு, கடவுளின் அன்பு, தியாகம் போன்றவற்றை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346b ) படி கீழ்கண்ட தருணங்களில் சிவப்பு நிற திருப்பலி உடை  அணியப்படுகிறது.  குருத்து ஞாயிறு, புனித வெள்ளி, பெந்தகொஸ்தே பெருவிழா, ஆண்டவரின் பாடுகளின் கொண்டாட்டங்கள், அப்போஸ்தலர்கள் மற்றும் நற்செய்தியாளர்களின் விழாக்கள், வேத சாட்சியாக மரித்த புனிதர்களின் திருநாள்கள்.

4. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் பச்சை நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

பச்சை நிறம் நித்திய வாழ்வு,  எதிர்நோக்கு போன்றவற்றை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346c) படி பொதுக்காலங்களில் பச்சை நிற திருப்பலி உடை  அணியப்படுகிறது.

5. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் ஊதா   நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

ஊதா நிறம் பரிகாரம், தாழ்ச்சி, துக்கம் போன்றவற்றை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346d) படி திருவருகை காலத்திலும், தவக்காலத்திலும், நீத்தார் நினைவு திருப்பலிகளிலும் ஊதா நிற திருப்பலி உடை  அணியப்படுகிறது.

6. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் கருப்பு   நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

கருப்பு துக்கத்தை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346e) படி நீத்தார் நினைவு திருப்பலிகளில் சில நாடுகளின் மறைமாவட்டங்களில் ஊதா தவிர வெள்ளை அல்லது கருப்பு நிற திருப்பலி உடை  அணியப்படுகிறது.

7. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் ரோஜா  நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

ரோஜா நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346f ) படி Gaudete Sunday (திருவருகை காலம் மூன்றாம் ஞாயிறு) மற்றும் Laetare Sunday (தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு) ஆகிய நாட்களில் அணியப்படுகிறது.

8. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் தங்க அல்லது வெள்ளி   நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

 தங்கம் மற்றும் வெள்ளி நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது. உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனையின் (346h ) படி சில பெருவிழா நாட்களில் சில நாடுகளின் மறைமாவட்டங்களில் அணியப்படுகிறது

9. திருப்பலியில் அருட்பணியாளர் அணியும் நீல நிற  திருப்பலி உடையின் முக்கியத்துவம் என்ன?

பொதுவாக நீல நிற திருப்பலி உடை பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சில மரியன்னை பெயரிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு மரியன்னையின் பெருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிறது.

10. திருப்பலியில் அருட்பணியாளர்கள் அணியும் உடையின் வடிவமைப்பை முடிவு செய்வது யார்?

திருப்பலியில் அருட்பணியாளர்கள் அணியும் உடையின் வடிவமைப்பை முடிவு செய்வது ஆயர்களின் பேரவை (Conference  of Bishops). சான்று: உரோமைத் திருப்பலிப் புத்தகத்தின் பொது போதனை 342

Related posts

Leave a Comment