அறிவோம் திருவிவிலியம்; திருவிவிலியம் பற்றிய கேள்விகள்

bible questions in tamil திருவிவிலியம்

1. திருவிவிலியத்தை  எழுதியது யார்?

திருவிவிலியத்தின் நூல்கள் ஓவ்வொன்றும் ஒரே முறையில் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு கால சூழ்நிலைகளில் எழுதப்பட்டது. கத்தோலிக்க திருஅவை அவற்றை தொகுத்து திருவிவிலியமாக நமக்கு அளித்ததுள்ளது‌.

2. பழைய ஏற்பாடு எப்படிழக்கத்தில் வந்தது?

பழைய ஏற்பாட்டு நூல்கள் மூன்று நிலைகளை தாண்டி இன்றைய வடிவத்தை பெற்றது. முதலில் வாய்மொழியாக ஒரு தலைமுறைமிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு சென்றது. பின்னர் சில எழுத்து பணி அறிந்தவர்கள் அவற்றை எழுதி வைத்தனர். அதற்கு பின், திறமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்து முறையில் இருந்தவற்றை கோர்வையாக நெறிப்படுத்தினார்கள். இந்த நூல்களின் எண்ணிக்கை 39.

3. முந்தைய கேள்விக்கான பதிலில் குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டின் 39 நூல்கள் எவை?

1. தொடக்க நூல் 2. விடுதலைப் பயணம் 3. லேவியர் 4. எண்ணிக்கை 5. இணைச் சட்டம் 6. யோசுவா 7. நீதித் தலைவர்கள் 8. ரூத்து 9. 1 சாமுவேல் 10. 2 சாமுவேல் 11. 1 அரசர்கள் 12. 2 அரசர்கள் 13. 1 குறிப்பேடு 14. 2 குறிப்பேடு 15. எஸ்ரா 16. நெகேமியா 17. எஸ்தர் 18. யோபு 19. திருப்பாடல்கள் 20. நீதிமொழிகள் 21. சபை உரையாளர் 22. இனிமைமிகு பாடல் 23. எசாயா 24. எரேமியா 25. புலம்பல் 26. எசேக்கியேல் 27. தானியேல் 28. ஓசேயா 29. யோவேல் 30. ஆமோஸ் 31. ஒபதியா 32. யோனா 33. மீக்கா 34. நாகூம் 35. அபக்கூக்கு 36. செப்பனியா 37. ஆகாய் 38. செக்கரியா 39. மலாக்கி

4. பழைய ஏற்பாட்டின் 39 நூல்கள் எந்த மொழியில் முதலில் எழுதப்பெற்றது ?

பழைய ஏற்பாட்டின் 39 நூல்கள் எபிரேய மொழியில் முதலில் எழுதப்பெற்றது. யூத மக்கள் எபிரேய மொழி பேசியதால், இந்த நூல்கள் எபிரேய மொழியில் தான் இந்த நூல்கள் எழுதப்பட்டன.

5. பழைய ஏற்பாட்டின் 39 நூல்களை அங்கீகரித்தது யார்?

பழைய ஏற்பாட்டின் 39 நூல்களை யூத குழு அங்கீகரித்து யூதர்களின் புனித நூல்களாக பிரகடனப்படுத்தியது. யூதர்கள் இவற்றை பழைய ஏற்பாடு என்று அழைப்பதில்லை. பின்னர் கத்தோலிக்க திருஅவையும் இந்த நூல்களை அங்கீகரித்து பழைய ஏற்பாடு என்று அழைத்தது.

6. கத்தோலிக்க திருவிவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் நூல்கள் எத்தனை?

கத்தோலிக்க திருவிவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் நூல்கள் 46.

7. 39 ஆக இருந்த பழைய ஏற்பாட்டு நூல்கள் எவ்வாறு 46 ஆக ஆனது?

கிபி இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனாவுக்கு வெளியே யூதர்கள் சிலர் கிரேக்கப் பகுதிகளுக்கு சென்று குடியேறினர். காலப்போக்கில் அவர்கள் கிரேக்க மொழியை வழக்கமாகிக்கொண்டனர். அதனால் தாய் மொழியாம் எபிரேய மொழியை மறந்தனர். இவர்களுக்காக இந்த நூல்கள் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றுடன் கிரேக்க மொழியில் எழுத பெற்ற எழு நூல்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.  இந்த எழு நூல்களையும் சேர்த்து 46 நூல்கள் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றது. இயேசுவின் காலத்தில் (கிமு 4 – கிபி 29) இந்த நூல்கள் மட்டுமே புனித நூல்களாக கருதப்பெற்றது.

8. கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற பழைய ஏற்பாட்டு நூல்கள் யாவை?

தோபித்து (இந்நூல் முதலில் அரமிய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அந்தப் பிரதி நமக்கு முழுமையாக கிடைக்கப் பெறாததால் கிரேக்க மொழி பெயர்ப்பே மூல பாடமாக இன்று பயன்படுத்தப்படுகிறது), யூதித்து (இந்நூல் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மூலநூல் கிடைக்காமையால் அதன் கிரேக்க  மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலமாக இருந்து வருகிறது),  சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம் (இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்துவிட இதன் மொழிபெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூலமாக பயன்பட்டு வருகிறது), பாரூக்கு, மக்கபேயர் முதல் மற்றும் இரண்டாம் நூல்கள், எபிரேய பாடங்களின் கிரேக்க இணைப்புகளான எஸ்தர் மற்றும் தானியேல் இணைப்புகள்.

9. கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற பழைய ஏற்பாட்டு நூல்களை யூதர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

இல்லை. கி.பி. 90 இல் ஜாமினியாவில் நடந்த யூத சபை, கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற நூல்களை அங்கீகரிக்கவில்லை.

10. புதிய ஏற்பாட்டு நூல்களிலின் நோக்கம் என்ன?

கிறிஸ்துவின் உலக வாழ்வு மற்றும் தொடக்க கால திருஅவையின் வளர்ச்சியை புதிய ஏற்பாடு நமக்கு எடுத்துரைக்கிறது.

11. புதிய ஏற்பாட்டு நூல்கள் யாருக்காக எழுதப்பட்டது?

புதிய ஏற்பாட்டு நூல்கள் அந்த அந்த கால சூழலுக்கு ஏற்ப ஒரு குறிபிட்ட உள்ளூர் திருஅவைக்கோ, ஒரு தனி நபருக்கோ எழுதப்பட்டவை.

12. புதிய ஏற்பாட்டு நூல்கள் எப்பொழுது எழுதப்பட்டன?

புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப் பெற்ற காலங்கள்  கிபி 5௦ – கிபி 125.

13. புதிய ஏற்பாட்டு நூல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?

புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும்  கிரேக்க மொழயில் எழுத பெற்றன.

14. நற்செய்தி நூல்கள் எந்த காலத்தில் எழுதப் பெற்றன?

நற்செய்தி நூல்கள் கிபி 7௦ – கிபி 1௦௦ வாக்கில் எழுதப்பெற்றன.

15. முதல் முதலில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் எது?

முதன் முதலில் எழுதபெற்ற புதிய ஏற்பாட்டு நூல் தெசலோனிக்கர்களுக்கு எழுதிய முதல் திருமுகம்.

16. புதிய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் எத்தனை?

புதிய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் 27.

17. கிறிஸ்துவின் உலக வாழ்வு மற்றும் தொடக்க கால திருஅவையின் வளர்ச்சியை அறிந்து கொள்ள புதிய ஏற்பாட்டின் 27 நூல்களைத் தவிர பிற நூல்களும் இருந்தனவா?

கிறிஸ்துவின் உலக வாழ்வு மற்றும் தொடக்க கால திருஅவையின் வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ள புதிய ஏற்பாட்டின் 27 நூல்களைத் தவிர பல நூல்களும் இருந்தன.

18. கிறிஸ்துவின் உலக வாழ்வு மற்றும் தொடக்க கால திருஅவையின் வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ள பல நூல்களும் இருந்த பொது எவ்வாறு 27 நூல்கள் மட்டும் புதியஏற்பாட்டில் இடம்பெற்றது?

தொடக்க காலத்தில் இருந்த பல்வேறு நூல்களை ஆராய்ந்து இறை ஏவுதலால் எழுதப்பெற்ற நூல்கள் எவை என்று கத்தோலிக்க திருஅவை முடிவு செய்தது. அதன்படி இன்று உள்ள 27 நூல்கள் மட்டுமே இறை ஏவுதலால் எழுதப்பெற்ற நூல்கள் என்று தீர்மானித்தது. 

19. முதன்முதலில் புதிய ஏற்பாட்டின் 27 நூல்களை வகைப்படுத்தியது யார்?

கிபி 367 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவின் ஆயர் அதானாசியுஸ் முதன் முதலில் புதிய ஏற்பாட்டின் 27 நூல்களை வகைப்படுதின்னர்.

20. புதிய ஏற்பாட்டின் 27 நூல்கள் எவ்வாறு  பிரகடனப்படுத்தப்பட்டன?

கி.பி. 382 ஆம் ஆண்டு ரோமில் நடந்த அறிவுரை குழுவில் (Council of Rome) அன்றைய திருத்தந்தை புனித முதலாம் தமாசுஸ் இந்த 27 நூல்களையும் பிரகடனப்படுத்தினார். மேலும் திருவிவிலியத்தில் இடம்பெறவேண்டிய நூல்களை (46 பழைய ஏற்பாடு நூல்களும் 27 புதிய ஏற்பாடு நூல்களும்) முடிவு செய்தனர். 393 ஆம் ஆண்டு ஹிப்போவில் நடைபெற்ற ஆயர் மன்றத்திலும் (Synod of Hippo) கி.பி. 397 ஆம் ஆண்டு கார்தேஜில் நடைபெற்ற ஆயர் மன்றத்திலும் (Council of Carthage) இதே 27 நூல்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. இதனால் இந்த 27 நூல்களை தவிர வழக்கத்தில் இருந்த பிற நூல்களை புதிய ஏற்பாட்டில் சேர்க்க அவை தூய ஆவியாரின் உந்துததால் எழுதப்பட்டவை அல்ல என்பது தின்னமானது.

21. இணைத் திருமுறை நூல்கள் என்றால் என்ன?

விவிலியத்தின் சில நூல்களின் இறை ஏவுதல் பற்றி கிறிஸ்தவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு தொடக்கத்தில் இருந்தே நிலவி வந்துள்ளது. திரெந்து நகரில் கூடிய திருச்சங்கம் இவற்றை இறை ஏவுதலால் எழுதப்பட்டது நூல்கள் என்று கி.பி. 1534_இல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இதனால் இவை இணைத் திருமுறை (Deutro-canonical)  நூல்கள் என பெயர் பெறுகின்றன.

22. இணைத் திருமுறை நூல்கள் யாவை?

தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேபயர், 2 மக்கபேயர், ஆகிய ஏழு நூல்களும் எஸ்தர், தானியேல் நூல்களில் காணப்படும் கிரேக்க இணைப்புகளும் எபிரேய விவிலியத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும் ‘செப்துவசிந்தா’ (எழுபதின்மர் மொழிபெயர்ப்பு) எனப்படும் கிரேக்க விவிலியத்தில் மேற்காணும் நூல்கள் இடம் பெறுகின்றன. இவையே இணைத் திருமுறை நூல்கள் எனப்படுகிறது.

23. இணைத் திருமுறை நூல்களை பிரிவினை சபையினர் ஏற்றுக்கொள்கின்றனரா?

இல்லை. இணைத் திருமுறை நூல்களை பிரிவினை சபையினர் ஏற்றுக்கொள்வதில்லை.

24. இணைத் திருமுறை நூல்களை பிரிவினை சபையினர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

யூதர்கள் இணைத் திருமுறை நூல்களை ஏற்றுக்கொள்ளாததால், பிரிவினை சபையினரும் இணைத் திருமுறை நூல்களை ஏற்றுக்கொள்வதில்லை.

25. எப்பொழுது திருவிவிலியத்தின் அனைத்து நூல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது?

கி.பி. 787 நைசியாவில் நடந்த  இரண்டாவது அறிவுரை குழுவில் (Second Counclil of Nicnea) முந்தைய சிறிய ஆயர் மன்றங்களின் ஆணைகளை ஏற்றுக்கொண்டது. கி.பி. 1441 ஆம் ஆண்டு புளோரன்ஸ் அறிவுரைக்கு குழு (Council of Florence)  ரோம் (Synod of Rome), ஹிப்போ (Synod of Hippo) மற்றும் கார்தேஜ் (Synod of Hippo) ஆயர் மன்றங்களலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்களின் பட்டியலை அங்கீகரித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டு, 46 பழைய ஏற்பாடு நூல்கள் 27 புதிய ஏற்பாட்டு நூல்கள் பட்டியல் ட்ரெண்ட் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

26. திருவிவிலிய மொழிபெயர்ப்பு எப்பொழுது முதல் நடைபெறுகிறது?

நான்காம் நூற்றாண்டில் ரோமையில் கத்தோலிக்க திருஅவை பரவலானதை அடுத்தி இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்புப்பணியை அன்றைய திருத்தந்தை புனித முதாலம் தமாசுஸின் ஆணைக்கேற்ப தூய எரோணிமுசு (St. Jerome) கி.பி. 382-கி.பி. 405 காலகட்டத்தில் செய்து முடித்தார். இதை “வுல்காத்தா” (Vulgate) மொழிபெயர்ப்பு என்று கூறுவர். 17 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு திருவிவிலியம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

27. திருவிவிலியத்தை யாரெல்லாம் மொழிபெயர்க்கலாம்?

திருவிவிலியத்தை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க கத்தோலிக்க திருஅவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 14  ஆம் நூற்றாண்டு முதல் திருஅவையின் ஒப்புதல் இல்லாமல் சுயமாக திரு விவிலியத்தை மொழி பெயர்தவர்களையும் அந்த மொழிபெயர்புகளையும் திருஅவை வன்மையாகவே கண்டித்து வந்துள்ளது.

28. திருவிவிலியத்திற்கு யாரெல்லாம் விளக்கம் கொடுக்கலாம்?

திருவிவிலியத்திற்கு விளக்கம் அளிக்கும் உரிமை கத்தோலிக்க திருஅவைக்கு மட்டுமே உள்ளது. 

29. திருவிவிலியத்தை மொழிபெயர்க்கவும் விளக்கம் அளிக்கவும் கத்தோலிக்க திருஅவைக்கு மட்டுமே ஏன் அதிகாரமும் உரிமையும் உள்ளது?

கத்தோலிக்க திருஅவை இயேசு கிறிஸ்துவால் தோற்றுவிக்கப்பட்ட திருஅவை. கத்தோலிக்க திருஅவை தான் தூய ஆவியாரின் ஏவுதலால் எந்த எந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதை முடிவு செய்து திருவிவிலியத்தை நமக்கு வழங்கியுள்ளது. திருஅவை இந்த நூல்களின் பழமையான தொகுப்புகளையும் மற்றும் அசல் புரிதலைக் கொண்டுள்ளது.  

30. கத்தோலிக்க திருஅவையை தவிர வேறு சபைகள் திருவிவிலியத்தை மொழிபெயர்க்கவும் விளக்கம் அளிக்க அதிகாரமும் உரிமையும் உள்ளதா?

திருவிவிலியத்தை மொழிபெயர்க்கவும் விளக்கம் அளிக்க அதிகாரமும் உரிமையும்  வேறு எந்த சபையும் கோர முடியாது. திருவிவிலியம் தூய ஆவியாரின் ஏவுதலால் எழுதப்பட்ட நூல்களை கொண்டுள்ளது. ஆனால் அவை விளக்கப்பட வேண்டும். பல்வேறு பிரிவினை சபைகள் தங்களுக்கு ஏற்றவாறு தூய ஆவியாரின் ஏவுதலால் எழுதப்பட்ட நூல்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டுள்ளனர். திருவிவிலியத்தில் எந்த எந்த நூல்கள் இருக்க வேண்டும் எனவும், அவற்றை வரிசை படுத்தி நமக்கு இன்றைய வடிவத்தில் கொடுத்தது கத்தோலிக்க திருஅவை. பிரிவினை சபைகளின் பரிசுத்த வேதாகமங்கள் அனைத்தும் கத்தோலிக்க திருஅவையிடமிருந்தே பெறப்பட்டவை.

31. கத்தோலிக்க திருஅவை திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்துகிறதா?

பல வருடங்களாக, கத்தோலிக்க திருஅவை விசுவாசிகளிடம் திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியே வருகிறது. அதே வேளையில்  திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள சத்தியத்தினை தூய ஆவியாரின் ஏவுதளோடு விளக்கவும் கற்பிக்கவும் , திருஅவையை ஒற்றுமையோடு வழிநடத்தும் அதிகாரத்தை, தன்னகத்தே கொண்டுள்ளது.

32. விவிலியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

Holy Bible என்ற   வார்த்தையின் நேரடி மொழிபெயர்ப்பே திருவிவிலியம் எனப்படுகிறது. அக்காலத்தில் புத்தகம் எழுதப் பயன்பட்ட “பப்பைரஸ்” (papyrus) என்னும் ஒருவகை நாணல் புல் இன்றைய லெபனான் நாட்டிலுள்ள பிப்ளோஸ் (Biblos) என்னும் நகரில் விற்கப்பட்டது. Papyrus என்னும் சொல்லிலிருந்தே Paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது.

பப்பைரஸ் விற்கப்பட்ட பிப்ளோஸ் நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. “The Book” என்பது பன்மையில் Biblia என்று ஆகும். பல்வேறு நூல்களை கொண்டதால் Bibila என்னும் சொல்லிலிருந்து Bible என்ற வார்த்தை தோன்றி இருக்கலாம். 

33. திருவிவிலியத்தில் அத்தியாயங்களும் (அதிகாரங்களும்) மற்றும் வசன எண்களும் அசல் பிரதியில் இருந்தனவா?

இல்லை. திருவிவிலியத்தில் அத்தியாயங்களும் (அதிகாரங்களும்) மற்றும் வசன எண்களும் அசல் பிரதியில் இருக்கவில்லை.

34. திருவிவிலியத்தின் அத்தியாயங்கள் (அதிகாரங்கள்) யாரால் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது? 

13 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் அறிஞரான ஸ்டீபன் லாங்டன் என்பவர் திருவிவிலியத்தில் அத்தியாயங்களை அறிமுகப்படுத்தியதாக அங்கீகரிக்கப்படுகிறார். இவர் பின்னர்  கேன்டர்பரியின் கத்தோலிக்க பேராயராக ஆனார்.

35. திருவிவிலியத்தின் வசன எண்கள் யாரால் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?

திருவிவிலியத்தின் வசனங்கள்  பதினாறாம் நூற்றாண்டின் பிரெஞ்சு அச்சகர் ராபர்ட் எஸ்டியென் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அங்கீகரிக்கப்படுகிறது. ஸ்டீபனஸ் (லத்தின் மொழியில் அவரது குடும்பப்பெயர்) என்று பரவலாக இவர் அறியப்பட்டார்.

36. பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இறைவனுடைய மீட்பளிக்கும் அன்பு வெளிப்படுத்தப்பட்ட முறைக்கு  பழைய ஏற்பாடு சாட்சியம் பகிர்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக, அனைத்துலக மீட்பராகிய கிறிஸ்துவின் வருகைக்குத் தயாரிப்பாக பழைய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன.

37. புதிய  ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புதிய ஏற்பாடு இறை வெளிப்பாட்டின் முழு நிறைவான உண்மையை நமக்கு வழங்குகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு,மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்களே திருமறை நூல்களுக்கு எல்லாம் இதயம் போன்றவை; ஏனெனில் இயேசுவின் வாழ்விற்கும் போதனைக்கும் அவையே முக்கிய சாட்சியங்களாக விளங்குகின்றன. அவ்வகையில் இந்நான்கு நற்செய்தி நூல்களும் திருஅவையில் தனி சிறப்பிடம் பெறுகின்றன.

38. பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

இறைவனின் வாக்கு ஒன்றே என்பதால் திருவிவிலியமும் ஒன்றே. மீட்பின் இறைத்திட்டமும் ஒன்றே. இரு ஏற்பாடுகளின் இறை ஏவுதலும் ஒன்றே. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டிற்குத் தயாரிப்பாக உள்ளது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிறைவாக அமைகிறது; ஒன்று மற்றொன்றைத் தெளிவுபடுத்துகிறது.

39. திருஅவையில் திருவிவிலியத்தின்பங்கு என்ன?

திருவிவிலியம் திருஅவைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது; இறைமக்களின் நம்பிக்கையின் உறுதிப்பாடாகவும், ஆன்ம உணவாகவும், அருள் வாழ்வின் ஊற்றாகவும் உள்ளது; இறையியலுக்கும் அருள்பணி போதனைக்கும் உயிர்நாடியாக உள்ளது.

40.  திருவிவிலியத்தை எவ்வாறு  வாசிக்க வேண்டும் என கத்தோலிக்க திருஅவை நமக்கு அறிவுறுத்துகிறது?

தூய ஆவியாரின் துணையாலும், திரு ஆசிரியத்தின் (திருஅவையின் அதிகார போதனை) வழிகாட்டுதலாலும், கீழ்காணும் மூன்று  வரையுறைகளுக்கு ஏற்ப திருவிவிலியத்தை வாசித்து, விளங்கிக்கொள்ள வேண்டும்.

1. திருவிவிலியம் முழுவதன் உள்ளடக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கவனத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். 

2. திருஅவையின் உயிருள்ள பாரம்பரிய வழிநின்று வாசிக்க வேண்டும்.

3. நாம் நம்புகின்ற உண்மைகளுக்கும் அவற்றுக்கும் இடையே நிலவும் உள்ளார்ந்த ஒன்றிப்புடனும், நமது கிறிஸ்துவ நம்பிக்கையுடனும் தொடர்பு படுத்திக் கவனத்தோடு வாசிக்க வேண்டும்.

41. திருவிவிலியத்தை எளிமையாக புரிந்துகொள்ள எளிமையான வழி ஏதேனும் உள்ளதா?

திருவிவிலியத்தின் ஒவ்வொரு நூலுக்கு முன்னும் உள்ள முன்னரையை படித்தல் உதவியாக இருக்கும். அந்த நூல் எந்த சூழ்நிலையில் யாரால் யாருக்க்காக  எழுதப்பெற்றது என்பதையும் நூலின் அமைப்பை பற்றியும் முன்னுரை எடுத்துக்கூறுகிறது.  மேலும் வசனங்களுக்கு (commentary / notes) விளக்கம் கொண்ட திருவிவிலிய பதிப்பை (ஒவ்வொரு பக்கத்திலும் அந்த பக்கத்தில் உள்ள வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்) படித்தல் மேலும் உதவியாக இருக்கும்.

42. திருவிவிலியம் மட்டும் தான் கிறித்தவ மார்க்கத்திற்கு அடிப்படையா?

இல்லை. திருவிவிலியம் இயற்றப்படுவதுற்கு முன்பு இருந்தே திருஅவை இருப்பதால், கிறித்தவ மார்க்கம் திருவிவிலியத்தை மட்டுமே சார்ந்தது அல்ல.

43. திருவிவிலியத்தை அதிகாரப்பூரவமாக திருஅவை எவ்வாறு அழைக்கிறது?

திருவிவிலியத்தை அதிகாரப்பூரவமாக திருஅவை “மறைநூல்” என்று அழைக்கின்றது.

44. கிறித்தவ மார்கம் எவற்றை மையமாக கொண்டுள்ளது?

திரு ஆசிரியம் (Magisterum – திருஅவையின் அதிகார போதனை),  தூய பாரம்பரியம் மற்றும் திருவிவிலியம் ஆகிய மூன்றும் கிறிஸ்துவ மார்க்கத்தின் அடிப்படையாகும். இவை மூன்றையும் தெளிவாக புரிந்துகொள்ளும் போதுதான் கிறிஸ்துவத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும். பிரிவினை சபையினரை போல் திருவிவிலியத்தை மட்டும் மனப்பாடம் செய்தால்  கிறிஸ்துவத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது.

இந்த தொகுப்பில் உள்ள பதில்களுக்கு சான்று: திருவிவிலியம், கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி சுருக்கம், catholic.com

Related posts

Leave a Comment